×

போலீசிடம் கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களை மீட்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது: காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் பேட்டி

கவுகாத்தி: மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி திரும்பாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் எம்.பி தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதனால் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிலையில் மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பாதது குறித்து கவுகாத்தியில் கவுரவ் கோகாய் கூறியதாவது: மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 6000 அதிநவீன ஆயுதங்கள், 6 லட்சம் தோட்டாக்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அந்த ஆயுதங்கள் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். எனவே அங்கு அமைதி திரும்புவது கடினம். இரு தரப்பினருக்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது, ​​​​எப்படி அங்கு அமைதி ஏற்படும். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டில் மெய்டீஸ், குக்கி இன மக்கள் மகிழ்ச்சியடையவில்லை.

ஆனால் அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் முதல்வர் பிரேன்சிங்கை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதி குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது. நிவாரண முகாம்களில் இன்னும் 60,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பா.ஜ ஊழல்களில் மோடி மவுனம்
கவுரவ் கோகாய் கூறும்போது,’பா.ஜவினர் செய்யும் ஊழல் விவகாரங்களில் மட்டும் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். கர்நாடகாவில் இருந்த பாஜ அரசின் 40 சதவீத கமிஷன் அரசு குறித்து புகார் எழுந்த போதும் பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டிய சமீபத்திய சிஏஜி அறிக்கை வெளியான போதும் அமைதியாக இருக்கிறார். இன்னும் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அப்போதும் அவர் அமைதியாக இருக்கிறார்’ என்றார்.

* நேரு முதல் ராகுல் வரை பா.ஜ அவமதிக்கிறது
கவுரவ் கோகாய் கூறுகையில்,’நேரு நினைவு அருங்காட்சியகம் பாஜவுக்கு நேரு-காந்தி குடும்பத்தை பிடிக்காததால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜவினர் நேரு முதல் ராகுல் காந்தி வரை அவர்களது குடும்பத்தை அவமதிக்கிறார்கள். தொடர்ந்து அவதூறு செய்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை விரும்புகிறார்கள். காங்கிரசுக்கும், பாஜவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அம்பானி, அதானியை பிரதமர் மோடி சந்திக்கிறார். ஆனால் ராகுல் காய்கறி விற்பனையாளரைச் சந்திக்கிறார்’ என்றார்.

The post போலீசிடம் கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களை மீட்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது: காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Peace ,Manipur ,Congress ,Gaurav Gokai ,Guwahati ,Lok Sabha ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...